Saturday, August 16, 2008

Thursday, July 31, 2008

இளவரசி டயானா வாழ்வுச்சுருக்கம்

உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது.அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது!பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.வெளியே...பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள்.ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது.பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’என்று கூட்டம் திமிற...ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின.அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது.டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்!டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் ‘டயானா ஜுரம்’ வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. ‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார். ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான்.திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை _ ஹென்றி.இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது.தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா.சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!

தாயகத் தாய் அன்னிபெசென்ட் அம்மையார்

இன்று உலகின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அங்கெல்லாம் தனியரசு காணவேண்டுமென்கிற தவிப்பும், துடிப்பும் அதற்கான போராட்டங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. எந்த நாடும், அது எவ்வளவு சிறிதானாலும் இன்னொருவரின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க விரும்பாமல் உள்ள உரம் பெற்று, தங்கள் நாட்டின் பரப்புக் குறைவையோ_ பலத்தின் மெலிவையோ எண்ணி ஏங்கிக்கொண்டிராமல், உறுதியுடன் போராடி வெற்றியும் பெற்று வருகின்றன.அப்படி அன்னியரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்தி, வெற்றி கண்டு, உலகிற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது இந்தியத் திருநாடு. நம்மைத் தொடர்ந்தே பற்பல நாடுகளும் தங்களைப் பிறரின் அதிகாரப் பிடியிலிருந்தும் அடிமைத்தளையிலிருந்தும் விடுவித்துக் கொண்டன தொடர்ச்சியான கிளர்ச்சிகளால்!

இந்திய விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துகொண்ட, உழைப்பையும் உதிரத்தையும், ஏன் தங்களின் இன்னுயிரையும் ஈந்த வீரர்கள் எத்தனை எத்தனை பேர்! இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகக் களமிறங்கிப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களின் கடமை; தேவை; கட்டாயம்! ஆனால் எங்கிருந்தோ அன்னிய மண்ணிலிருந்து இங்கே வந்து குடியேறி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க இயலாமல் அடிமை இருளில் அவதிப்பட்டுக் கிடந்த நமது மக்களை, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும், அவர்களின் குடைகவிழ்ந்து, கோல் சாய்ந்து, கொடியும் வீழ்ந்து, கோட்டை கொத்தளங்களை விட்டுத் தங்கள் குடிபடைகளோடு நாட்டைவிட்டு வெளியேறச் செய்த போராளிகளும் உண்டு.அப்படி அயர்லாந்து நாட்டிலிருந்து இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வந்து, நமது நாட்டு விடுதலைக்கும், இந்தியப் பெண்களின் வீட்டு விடுதலைக்கும் துணைநின்ற மாதரசிகளில் ஒருவர் _ அன்னிபெசன்ட் அம்மையார்!

அன்னி பிறந்தது லண்டனில், 1.10.1847_ல்! ‘‘நான் முக்கால் ஐரிஷ்காரி, கால்வாசி இங்கிலீஷ்காரி’’ என்பார். தாய் ஐரிஷ்; தந்தையைப் பெற்ற பாட்டி ஐரிஷ். தந்தை இங்கிலீஷ்காரர். முன்னோர்களில் ஒருவர் மந்திரியாகவும், இன்னொருவர் லண்டன் மேயராகவும் இருந்திருக்கிறார்கள்.ஏழைகளுக்குக் கட்டணமில்லாமல் வழக்காடி வந்த வக்கீல் ராபர்ட்ஸ், ‘‘ஏழைகளே வேலை செய்யும் தேனீக்கள். செல்வத்தை உற்பத்தி செய்கிறவர்கள். நியாயம் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. கருணையின்பேரில் தானம் தரவேண்டியதில்லை’’ என்று சொல்லிவந்த உபதேசம், இளம் வயதிலேயே அன்னியின் மனதில் ஆழப் பதிந்தது.

ஏழைகளுக்கு எவ்வழியிலேனும் தொண்டாற்றத் துடித்த அன்னியை, அவரது அழகில் மயங்கிய பிராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் காதலித்தார். பாதிரியின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்கள். அன்னியும் அவரை மணக்கச் சம்மதித்தார்.ஆனால், மணவாழ்க்கையோ அவரது சொந்த வாழ்க்கையிலும் சோகத்தை நிரப்பியது. அன்னிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள்.மகள், கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டாள். எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் குழந்தைக்கு அந்த நோய் குணமானபாடில்லை. மகள்படும் அவதியைக் கண்டு அன்னி தினம் தினம் ரத்தக் கண்ணீர் வடித்தார்.‘குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன் இந்தத் துன்பம்? கடவுள் இந்தக் கொடுமையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? அப்படியானால் அவருக்குக் கருணை என்பதே இல்லையா? ஒருவேளை கடவுள் என்பதெல்லாம் நமது கற்பனைதானா? அப்படி ஒருவர் கிடையவே கிடையாதா?’ _ இப்படியெல்லாம் எண்ண அலைகள் அவர் இதயத்தில் ஆர்ப்பரித்தன. உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது.இந்தத் துன்பங்களோடு ஒருநாள் கணவனின் தூஷணையும் துணைசேர்ந்தது.

விரக்தியும், வெறுப்பும் அன்னியை வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டின... உடம்பிலிருந்து உயிருக்கு விடுதலை... அது ஒன்றுதான் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒரேவழி என்கிற விபரீத முடிவிற்கு வந்தார் அன்னி! ஆம்... தற்கொலைக்குத் துணிந்தார்!கொடிய தூக்க மருந்தான குளோரோஃபார்ம் சீசாவை எடுத்தார். அதை முகர்ந்து முழுதாக மூச்சை இரண்டுமுறை உள்ளிழுத்தால் போதும்... மீளாத் தூக்கம் தூக்கம்தான்...சீசாவையும் திறந்துவிட்டார்... ஆனால் அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. ‘அன்னி! ஏனிந்த கோழைத்தனம்! உனது சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா, ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்? முடியுமா உன்னால்...?’ எள்ளலும் ஏகடியமுமாக அவரை ஏசியது அந்த மனக்குரல். சீசாவை வீசி எறிந்தார் வெளியே!வாழ்க்கைப் பாதையில் இனி தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார்.ஆனாலும் இத்தனை நாள் கொண்டிருந்த இறை நம்பிக்கையின் மீது அவருக்கு சந்தேகம் மேலும் மேலும் வலுத்தது...கிறிஸ்தவ மதத்தில் தனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை புத்தகமாக எழுதினார். அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதில் தனது பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை.புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகர பாதிரியார்கள் பதறினர்... ‘யார் செய்த வேலை இது?’ என்று ஆளைத் தேடும் முயற்சியில் அலைந்தனர்.இறுதியில் இது அன்னியின் கைங்கர்யம்தான் என்பதைக் கண்டுபிடித்தபோது, கணவரான பாதிரியார் வெகுண்டார். ‘‘வீட்டை விட்டு வெளியே போ’’ என்று அன்னியை விரட்டினார்...தன் இரு குழந்தைகளோடு வெளியேறிய அன்னி, குடும்பம் நடத்தவும் குழந்தைகளை வளர்க்கவும் படாதபாடுபட்டார்.கைப்பொருளை விற்றார். தையல் வேலை செய்தார்... சமையல்காரியாக இருந்தார்... ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 26தான்.பல புத்தகங்களை அவர் எழுதியும், அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பேசியும் வந்த நாட்களில், ‘நேஷனல் ரீஃபார்மர்’ என்ற பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் பிரம்மஞான சங்கத்தின் தலைவி பிளாவட்ஸ்கி அம்மையாரின் அறிமுகம் கிடைத்தது. அந்த சங்கத்தில் சேர்ந்து, பின்னாளில் அந்த இயக்கத்தின் தலைமைப்பொறுப்பையும் அன்னி ஏற்றார்.

1893_ல் அவர் இந்தியாவுக்கு முதன்முதலாக வந்தபோது, ‘‘புண்ணிய பூமிக்கு வந்தேன்’’ என்றார்.கங்கையில் நீராடி, தனது ஐரோப்பிய உடையைத் துறந்துவிட்டு, அன்று முதல் புடவை உடுத்தலானார். ‘‘பழைய வேதத்தையும், இந்து மதக் கோட்பாடுகளையும் மீண்டும் இந்திய மக்கள் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா பழைய மகோன்னத நிலையை அடையும்’’ என்றார் இந்த ஐரோப்பியப் பெண்மணி.அன்னி ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி, சமூகசீர்திருத்தம், அரசியல்.1898_ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904_ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்), ‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில் காரசாரமாக எழுதி வந்தார்.இது ஆங்கிலேய அதிகாரிகளை ஆத்திரமூட்டியது. இதன் விளைவாக, ‘ஊட்டி(உதகை)யை விட்டு வெளியேறக் கூடாது’ என்று அன்னிக்கு உத்தரவிட்டார்கள் 1917_ல்!அப்போதைய நீதிபதி மணி ஐயர், ‘‘இந்த அநீதியைக் கண்டிக்க உலகில் யாருமில்லையா?’’ என்று அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்குக் கடிதம் எழுதினார்.வில்சன், பிரிட்டன் பிரதம மந்திரியை இது சம்பந்தமாகக் கேட்க, அவர் அதிகாரிகளைக் கூப்பிட்டு, அன்னி மீதிருந்த தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டார்.அடுத்த ஆண்டில் நடந்த கல்கத்தா காங்கிரசுக்கு அன்னிபெசன்ட் தான் தலைமை ஏற்றார்.மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது, அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு அன்னிபெசன்ட் காங்கிரசிலிருந்து வெளியேறினார். ‘பரிபூரண சுதந்திரம் என்பது மாயை! கானல்நீர்! பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுறவுமே நாட்டு வளர்ச்சிக்கு நல்லது’ என்றார். அவர் விருப்பம்போலவே இந்தியா இப்போதும் காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.ஐம்பது ஆண்டுகள் இந்திய மக்களுக்காகவே உழைத்த அன்னிபெசன்ட், 20.9.1933 அன்று இயற்கை எய்தினார்.

ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சொல்லிய பல திட்டங்கள் இன்று அமலில் உள்ளதைக் காண்கிறோம்.ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இலவச உணவு அளித்து மருத்துவ வசதியும் செய்துதர வேண்டும். பசித்த குழந்தைகளுக்கு பாடம் மட்டும் சொல்லித்தருவது பயனற்றது. வயிற்றுக்கும் சோறிடல் வேண்டும்’ என்று வலியுறுத்தியது அவர்தான்.ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.கிராமப் பஞ்சாயத்துகள் தோன்றி, பள்ளிகள், கிராமத் தொழிற்கூடங்கள், துப்புரவு, மருத்துவம், சிவில் துறைகளில் நீதி வழங்குவது போன்றவற்றை அவை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் அன்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தார். பின்னாளில் கிராமப் பஞ்சாயத்து போர்டுகள் தொடங்கப்பட்டன.

அன்னிபெசன்ட் மறைந்தபோது மகாத்மா காந்தி...

‘‘1888_க்குப் பிறகு, நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, மற்ற பலரைப்போல நானும் பிராட்லாவையும் அன்னிபெசன்ட்டையும் போற்றிப் புகழ்ந்தேன். அப்போது நான் யாருக்குமே தெரியாத சாதாரணப் பையன். பிளாவட்ஸ்கி, அன்னிபெசன்ட் ஆகியோரின் பக்கத்தில் நான் நிற்பதையே பெரும் பாக்கியமாகக் கருதியிருந்தேன்.அவர் இந்தியா வந்து இந்திய மக்களின் இதயங்களில் இடம்பெற்றதும் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். எங்களுக்குள் அரசியல் வேற்றுமைகள் இருந்தபோதிலும்கூட அவரிடம் எனக்கிருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை’’ என்றார்.

Wednesday, July 30, 2008

..வறுமை, கவிஞனின் தனி உடைமை!

செல்லம்மாள் பாரதி:

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)"

..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிýருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிýருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிýருக்க முடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.புதுவை þþ எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை þþ இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

இலக்கின் உறுதிமொழி:
"என் உலகம் மானத்துடனும் ,மனிதாபிமானத்துடனும்
வாழ்ந்து வளம்பெற என்றும் பேனாக்காரர்களை-நான்
பெரிதும் மதித்து பெருமைசேர்ப்பேன்! "

இதயம் பிளந்த போதும் இலக்கு பிளக்காதவன்.

ஆப்ரகாம் லிங்கன் :

இவரைப்போ வாழ்க்கையில் சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்தவர் எவரும் இருக்கமுடியாது.ஆனால் அவர் கலங்கி நிற்காமல் சோதனைகளைக் கடந்து வந்து வெற்றி கண்டார். சாதாரண வெற்றி அல்ல, உலகமே திரும்பிப் பார்த்த வெற்றி. அமெரிக்க ஜனாதிபதி ஆனார் இந்த சாதாரண மனிதர்.ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. 1809-ம்வருடம் பிப்ரவரி 12-ல் மிக மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் லிங்கனுக்கு வி வ சா யத் தி ல் ஆர்வமில்லை. புத்தகங்கள் படிப்பதில்தான் ஆர்வம் அதிகமிருந்தது. இந்தக் காலத்தைப் போல் அப்போதெல்லாம் புத்தகங்கள் குவிந்து இருந்ததில்லை.தேடித்தேடிதான் படிக்கவேண்டும். விவசாய வேலையை விட்டுவிட்டு புத்தகங்களைத் தேடி அலைந்ததனால் லிங்கன் மீது தந்தைக்கு வெறுப்பு. லிங்கனுக்கு பத்து வயதிருக்கும்போது, தாய் மரணமடைய,தந்தை மறுமணம் செய்தார். வந்த சித்தி லிங்கன் மீது பாசம் வைத்தார். அதுதான் அந்த வயதில் லிங்கனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.இருபத்தேழு வயதில் குடும்பத்தை பிரிந்து வேலை தேடி நியு ஆர்லியன்ஸ் நகருக்குச் சென்றார் லிங்கன். அங்கே கிடைக்கும் வேலைகள் எல்லாவற்றையும் செய்தார்.ஆனால் எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. உள்ளூர் தபால் ஆபீஸில் தபால்காரராகக் கூட வேலை பார்த்தார். அதுவும் நீடிக்கவில்லை. இப்படியொரு சூழலில் அந்த ஊரில் ஒரு ரவுடி எல்லோரிடமும் வம்பு செய்து கொண்டிருந்தான். லிங்கனிடமும்வம்பு செய்ய, லிங்கன் அவனை அடித்து நொறுக்கி விட்டார். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே அவருக்கு நல்ல பெயரைத் தேடித் தந்தது.பொதுநலக் காரியங்களில் ஈடுபடத் துவங்கினார். தேர்தலில் நிற்கும் ஆசை வந்தது.

முதலில் உள்ளூர்த் தேர்தல்களில் நின்றார். படிப்படியாக வளர்ந்து இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் நின்று ஜெயித்து ஜனாதிபதியானார்.இப்படி ஒரே பத்தியில் வேகவேகமாக அவர் ஜனாதிபதி ஆன கதையைப் படிப்பதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் லிங்கன் வாழ்க்கை உயர்வு அத்தனை எளிதாக இல்லை. அவர் சந்தித்த தோல்விகளின் பட்டியல்களைப் பாருங்கள்.போட்டியிட்ட முதல் உள்ளூர்த் தேர்தலில் தோல்வி. அவர் நடத்திய கடை நஷ்டம் வந்து மூடப்பட்டது. அவருடைய கூட்டாளி திடீரென்று இறந்துவிட அந்தக் கடன் சுமையும் லிங்கன்மேல் விழுந்தது. கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வி. உபஜனாதிபதிக்கு நடந்த தேர்தலில் தோல்வி.லிங்கன் செய்த எந்தத் தொழிலுமே வெற்றியடைந்ததில்லை.இப்படி தோல்விகளின் பட்டியல் ஒருபுறமிருக்க, அவர் சந்தித்த மரணப் பட்டியலும் மனதை வருத்துபவை. பிறந்த சில மாதங்களிலேயே தம்பி ஒருவன் இறந்தான். பத்து வயதிருக்கும் போது தாய்

இறந்தார். காதலி திடீரென்று மரணமடைந்தார். பிரசவத்தின்போது அக்கா இறந்தார். லிங்கனுக்குத் திருமணமாகி பிறந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு வயதில் இறந்தது. இன்னொருவன் பன்னிரண்டு வயதில் இறந்தான். இன்னொரு மகன் பதினெட்டு வயதில் இறந்தான்.ஒரே ஒரு மகன்தான் நீண்டகாலம் வாழ்ந்தான்.இத்தனை தோல்விகள், இத்தனை மரணங்களைச் சந்தித்தபிறகும் லிங்கன் நிலை குலையவில்லை,கலங்கவில்லை.தன்னுடைய லட்சியத்தை விடாமல் துரத்தினார். லிங்கன் முதலில் 'வீக்' கட்சியில்தான் இருந்தார்.பிறகு ரிபப்ளிகன் கட்சிக்கு மாறினார். கடுமையான போராட்ட வாழ்க்கையிலும் படிப்பை மறக்கவில்லை. சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றினார். மக்கள் சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அறுபத்தோராவது வயதில் அவர் அமெரிக்கா ஜனாதிபதியான போது அங்கே உள்நாட்டுக் குழப்பம் இருந்தது.அதை திறம்பட சமாளித்தார்.இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், சோதனைகளைக் கண்டு சிறிதும் கலங்காத அவரது மன உறுதியும் அவரது விடா முயற்சியும். இதுதான் ஆபிரஹாம் லிங்கனின் வெற்றிகளின் விலாசங்கள்

இலக்கின் உறுதிமொழி :

" ஆயிரம் சோதனைகள் வரினும்

ஆபிரகானைப்போல- நான்

கொண்ட இலக்கு பிளக்காதவனாய் இருப்பேன்"